வன்னிக் களத்தில் 50 சதவிகிதம் இந்திய ராணுவ வீரர்களே! - அம்பலப்படுத்தும் பிரெஞ்சு மீடியா
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிடும் சிங்கள இனவெறி ராணுவத்தின் இரண்டு படையணிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நிறைந்துள்ளதாகவும், அந்த படைகள் முழுவதையும் இந்திய கமாண்டர்களே வழிநடத்திச் செல்வதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
வட இலங்கையின் போர்க்களத்தில் இதுவரை தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த இலங்கை ராணுவம், இப்போது கடும் சேதங்களை விளைவித்து வருகிறது. இதுவரை யாரும் பயன்படுத்தாத கொடிய விஷக் குண்டுகள் மற்றும் உயிர்க் கொல்லி ஆயுதங்களை தமிழர்கள் மற்றும் அவர்களுக்காக களத்தில் நிற்கும் புலிகள் மீது வீசி மொத்தமாக ஒரு பேரினப் படுகொலையை நடத்த வேக வேகமாக செயல்பட்டு வருகிறது.
இலங்கையின் இந்தப் புதிய வேகத்துக்குக் காரணம் இந்தியாதான் என்று பல தரப்பினரும் ஆதாரங்களுடன் செய்திகளைப் பிரசுரித்து வந்துள்ளது நினைவிருக்கலாம்.
போர்க் களத்தில் இந்தியாதான் இலங்கைக்கு சகல உதவிகளையும் செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகளும் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆனாலும் உலகம் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக ஆதாரப்பூர்வமான செய்தியொன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி:
இலங்கையின் 58-வது இராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வடக்கு இலங்கையில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் புலிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் இந்திய வீரர்களே!
இதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய இராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை இராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.
சமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.
மேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
மேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
தற்போதும் கூட புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் உயிரிழந்த சுமார் 125 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரஙகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை இராணுவத்தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.